நெருஞ்சில்
மருத்துவப் பயன்கள்:
நெருஞ்சில் முழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்; சிறுநீர் பெருக்கும்; காமம் பெருக்கும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; ஆண்மையைப் பெருக்கும்; இரத்தைப்போக்கை கட்டுப்படுத்தும்.
நெருஞ்சில் கனிகளில், நிலைத்த எண்ணெய், பிசின்கள் மற்றும் நைட்ரேட் உப்புகள் காணப்படுகின்றன. நெருஞ்சில் விதைகள், சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு ஆகியவற்றைக் குணமாக்கும்.
நெருஞ்சில் தரையோடு படரும் செடி வகையைச் சார்ந்தது. நுண்ணிய மயிரிழைகளால் அடர்த்தியாக சூழப் பட்டிருக்கும். சுரீல் எனக் குத்தும் முட்கள் பொன் மஞ்சள் நிறமான மலர்களைக் கொண்டு நெருஞ்சிலை அடையாளம் கண்டறியலாம்.
நெருஞ்சில் இலைகள் சமமற்ற கூட்டிலைகளால் ஆனவை. தனி மலர்கள், இதழ்கள் பொன் மஞ்சள் நிறம். நெருஞ்சில் கனிகள் உறுதியான முட்களுடன் கூடியவை. ஐந்து பக்கங்களுடன் பத்து சமமற்ற முட்களைக் கொண்டது.
நெருஞ்சில் விதைகள் எண்ணிக்கையில் அதிகமானவை. நெருஞ்சில் சமவெளிப் பகுதிகள் கடற்கரை ஓரங்கள் சாலை ஓரங்களில் மழைக் காலத்தில் மிகவும் பரவலாக காணப்படும் ஒரு களைச் செடி. 3000 மீ உயரமான மலைப் பகுதிகளிலும் பரவிக் காணப்படுகின்றது.
சிறு நெருஞ்சில், திரிகண்டம், கோகண்டம் போன்ற மாற்றும் பெயர்களும் நெருஞ்சில் தாவரத்திற்கு உண்டு. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. நெருஞ்சில் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
நெருஞ்சில் 50 கிராம் அளவிற்கு சுத்தம் செய்து எடுத்துக்கொண்டு, 500 மி.லி. நீரில் போட்டு, பாதியாகச் சுண்டக்காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொண்டு 25 மி.லி. வீதம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குடிக்க சிறுநீர்க் கடுப்பு குணமாகும்.
நெருஞ்சில் சூரணம் ½ கிராம் முதல் 1 கிராம், 1 டம்ளர் மோரில் கலந்து, தினமும் இரண்டு வேளைகள் குடித்துவர வெள்ளைப்படுதல் குணமாகும்.
நெருஞ்சில் முழுத்தாவரத்தையும் இடித்துப் பிழிந்த சாறு 50 மி.லி.யுடன், 1 டம்ளர் மோர் கலந்து குடிக்க சிறுநீருடன் இரத்தம் வருதல் கட்டுப்படும்.
நெருஞ்சில் விதைகளைப் பாலில் அவித்து, காயவைத்து, தூள் செய்து வைத்துக்கொண்டு, காலை, மாலை 1½ தேக்கரண்டி அளவு பாலில் கலந்து குடித்துவர ஆண்மை பெருகும்.
நெருஞ்சில் செடி 2, அருகம்புல் ஒரு கைப்பிடி, ஒரு லிட்டர் நீரில் நசுக்கிப்போட்டு, கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி, 50 மி.லி. அளவு, காலை, மதியம், மாலை வேளைகளில் 3 நாட்கள் வரை குடிக்க உடல் சூட்டால் ஏற்படும் கண்எரிச்சல். கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.
யானை நெருஞ்சில்:
மழைக்காலத்தில், தரிசு நிலங்களில், மஞ்சள் நிறமான பூக்களுடன் வளர்ந்து காணப்படும் தாவரம். சாலை ஓரங்களிலும் அதிகமாகக் காணப்படும. இலைகள் சதைப்பற்றானவை. இதன் முட்கள் பெரியவை. தாவரம் முழுவதும் கொழகொழப்புத் தன்மை மிகுந்தது. ஆயுர்வேத மருத்துவத்தில் மிக அதிகமாக உபயோகிக்கப்படுகின்றது.
யானை நெருஞ்சில் முழுத்தாவரமும் வெண்குஷ்டம், கல்லடைப்பு, உடல் எரிச்சல், நீர்வேட்கை மற்றும் உடல்சூடு காரணமாக ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்மைத் தன்மையும், விந்து சுரப்பையும் அதிகமாக்கும். வெள்ளைப்படுதல், வெட்டைச் சூட்டைக் குணப்படுத்தும்.
யானை நெருஞ்சில் இலையை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் கலந்து, காலையில் மட்டும் சாப்பிட்டுவர வேண்டும். 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வெட்டைச் சூடு குறையும்.
யானை நெருஞ்சில் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, மைய அரைத்து, ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து, காலையில் மட்டும் உட்கொள்ள வேண்டும். 20 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்.
0 comments:
Post a Comment